நேபாளம் வழியாக பீஹாருக்கு பயங்கரவாதிகள் செல்லவில்லை: நேபாள குடியேற்றத்துறை விளக்கம்
நேபாளம் வழியாக பீஹாருக்கு பயங்கரவாதிகள் செல்லவில்லை: நேபாள குடியேற்றத்துறை விளக்கம்
ADDED : ஆக 30, 2025 03:26 AM

காத்மாண்டு: பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீஹாருக்குள் ஊடுருவவில்லை; அவர்கள் மலேஷியா சென்றுவிட்டதாக நேபாள குடியேற்றத்துறை விளக்கம் அளித்து உள்ளது.
பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் உசைன், முகமது உஸ்மான் ஆகியோர் நேபாளம் வழியாக பீஹாருக்குள் நுழைந்து உள்ளதாக உளவுத்துறை தெரிவித்தது.
அவர்களின் புகைப்படங்கள், பாஸ்போர்ட் எண் ஆகியவற்றையும் வெளியிட்டனர். இது குறித்து நேபாள குடியேற்றத் துறையின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த விளக்கம்: ஜெய்ஷ் - இ - -முகமது பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் மூன்று பாகிஸ்தானியர்களில் இரண்டு பேர் ஆகஸ்ட் 8ம் தேதியும், ஒருவர் ஆகஸ்ட் 10ம் தேதியும் சுற்றுலா விசாவில் நேபாளத்திற்கு வந்தனர். குடியேற்ற நடைமுறைகளை முடித்து விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
இந்த மூவர் குறித்து இந்திய அதிகாரிகளோ, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலிடம் இருந்தோ எந்த எச்சரிக்கையும் எங்களுக்கு வழங்கப் படவில்லை.
அவர்களின் பாஸ்போர்டுகள் எந்த கண்காணிப்பு பட்டியலிலும் இல்லை. இருந்திருந்தால் நாங்கள் கைது செய்து இருப்போம்.
நேபாளம் வந்த சந்தேக நபர்களில் ஹஸ்னைன் அலி மற்றும் அடில் ஹுசைன் ஆகஸ்ட் 15ம் தேதி இரவு மலேஷியாவுக்கு சென்றனர்.
முகமது உஸ்மான் ஆகஸ்ட் 24ல் மலேஷியாவுக்கு சென்று உள்ளார். அவர்கள் பீஹாருக்கு செல்லவில்லை.
காத்மாண்டுவில் தங்கியிருந்த காலத்தில் இவர்கள் பீஹாருக்கு சென்றனரா என்பது குறித்த தகவல் இல்லை. அவர்கள் தங்கியிருந்த இடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.