11 ஆண்டுகளாக அசைவற்ற இளைஞர்; கருணை கொலைக்கு கோர்ட் மறுப்பு
11 ஆண்டுகளாக அசைவற்ற இளைஞர்; கருணை கொலைக்கு கோர்ட் மறுப்பு
ADDED : நவ 13, 2024 12:39 AM

புதுடில்லி ; தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், கடந்த 11 ஆண்டுகளாக அசைவற்ற நிலையில் இருக்கும் 30 வயது இளைஞரின் கருணை கொலைக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை அரசு செய்யும் என, உறுதி அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவர் ஹரிஷ் ரானா, 30. இவர், 2013ல், பஞ்சாப் பல்கலையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த ரானாவின் உடல் முற்றிலுமாக செயலிழந்தது. கண் விழித்த நிலையில் இருந்தாலும், 'வெஜிடேட்டிவ் ஸ்டேட்' எனப்படும், அசைவற்ற நிலைக்கு சென்றார்.
கண்கள் ஒரே இடத்தில் நிலைக்குத்தி இருக்கும், கை, கால்கள் அசைவற்று கடந்த 11 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார்.
இவரை வயதான பெற்றோர் கவனித்து வருகின்றனர். சொந்த வீட்டை விற்று சிகிச்சை அளித்த நிலையில், ரானாவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
தங்கள் காலத்துக்கு பின் மகனை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தினாலும், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வசதி இல்லாததாலும், மகனை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும்படி டில்லி உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 'ஹரிஷ் ரானாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியோ, குழாய் வழியே உணவு அளிக்கும் நிலைக்கோ செல்லவில்லை. எவ்வித மருத்துவ கருவிகளின் உதவியும் இன்றி அவர் உயிர் வாழ்ந்து வருகிறார். அப்படி இருக்கையில் அவரை கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது' என, உத்தரவிட்டது.
இந்நிலையில், ரானாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரானாவின் பராமரிப்புக்கான மாற்று தீர்வுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரதுறைக்கு உத்தரவிட்டது.
மத்திய சுகாதாரத்துறை கடந்த, 8ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையின் விபரம்:
உத்தர பிரேதச அரசின் உதவியுடன், ஹரிஷ் ரானாவை அவரது வீட்டில் வைத்து பராமரிக்க தயாராக உள்ளோம். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் செவிலியர் வசதிகள் செய்து தரப்படும். மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
வீட்டு பராமரிப்பு வேண்டாம் என மனுதாரர் நினைத்தால், நொய்டா மாவட்ட மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ரானாவின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஹரிஷ் ரானாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என பெற்றோருக்கு உறுதி அளித்தது.
எந்த நிலையிலும், வேறு உதவிகள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடும்படியும் உத்தரவில் குறிப்பிட்டனர்.