வட கர்நாடகாவுக்கு முக்கியத்துவம்: சபாநாயகர் காதர் திட்டவட்டம்
வட கர்நாடகாவுக்கு முக்கியத்துவம்: சபாநாயகர் காதர் திட்டவட்டம்
ADDED : டிச 09, 2024 06:50 AM

பெலகாவி: ''குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், வட கர்நாடக மேம்பாட்டு தொடர்பாக முக்கிய விவாதம் நடத்தப்படும்,'' என சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
பெலகாவி குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்க உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை, சபாநாயகர் காதர் நேற்று பார்வையிட்டார்.
3,004 கேள்விகள்
பின், அவர் அளித்த பேட்டி:
வட கர்நாடகா மேம்பாட்டு பணிகள் குறித்து கூட்டத்தொடரின் துவக்கம் அல்லது முடிவில் விவாதிக்கப்படுமா என்பதை இப்போது கூற முடியாது.
இம்முறை, 'கர்நாடக பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா - 2024'; 'பசவனபாகேவாடி மேம்பாட்டு ஆணையம் மசோதா - 2024'; 'ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா - 2024; கர்நாடக தொழிலாளர் நல நிதி (திருத்தம்) மசோதா - 2024; கர்நாடக சுற்றுலா ரோப்வே மசோதா - 2024 ஆகிய ஐந்த மசோதாக்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
இது தொடர்பாக, 3,004 கேள்விகளும்; 205 கவன ஈர்ப்பு நோட்டீசும்; 351 நோட்டீஸ்கள் 96வது விதியின் கீழும் வந்துள்ளன.
இது தவிர, எம்.எல்.ஏ.,க்கள் தர்ஷன் புட்டண்ணய்யாவின், 'கர்நாடக மாநிலத்தில் பருவநிலை மாற்றம் மசோதா - 2024; எம்.ஒய்.பாட்டீல் கங்காபூரின், 'தத்தாத்ரேயா கோவில் கள மேம்பாட்டு ஆணைய மசோதா - 2024'; எச்.கே.சுரேஷ் பேலுாரின் 'ஹளேபீடு உலக பாரம்பரிய தள மேலாண்மை ஆணைய மசோதா - 2024' தாக்கல் செய்யப்பட உள்ளன.
அபராதம்
சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பர். பெலகாவியில் எம்.எல்.ஏ.,க்கள் பவன் கட்டுவது தொடர்பாக, விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும்.
விவாதத்தில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.கூட்டத்தொடருக்காக, 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 6,500 பேர் போலீசார். கலெக்டர் தலைமையில், உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து உட்பட பத்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. போராட்டம் நடத்துவோருக்காக இரண்டு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
நாளை (இன்று) காலை 11:00 மணிக்கு அனுபவ மண்டபத்தில் வரையப்பட்ட 'ஆயில் ஓவியங்களை' முதல்வர் சித்தராமையா திறந்து வைப்பார். இது வெறும் ஓவியம் மட்டுமல்ல; நமது வரலாறு, கலாசாரத்தை பிரதிபலிக்கும். 12ம் நுாற்றாண்டில் விஸ்வகுரு பசவண்ணர், ஜனநாயக நடைமுறையை கொண்டு வந்தார்.
இன்றைய இளைஞர்கள், மாணவர்களுக்கு நமது கலாசாரம், வரலாற்றை தெரிவிக்கும் வகையில், இந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
� சட்டசபை கூட்டத்தொடருக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும்; இன்று முதல்வர் சித்தராமையா திறந்து வைக்கவுள்ள அனுபவ மண்டபத்தில் உள்ள ஓவியங்களையும் பார்வையிட்ட சபாநாயகர் காதர். இடம்: பெலகாவி.