பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் இம்ரான் அடைப்பு
பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் இம்ரான் அடைப்பு
ADDED : ஆக 21, 2026 06:44 PM
இஸ்லாமாபாத்: 22–: நீதிமன்ற உத்தரவுப்படி பரிசோதனை முடிந்ததை அடுத்து, பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 73, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று, 2023 முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடுமையான மன அழுத்தம், கண் பார்வை பிரச்னை இருப்பதாக குடும்பத்தினர் கூறினர். தொடர்ந்து, அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 18ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்த பாக்., அரசின் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில், இம்ரான் கான் நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். கண் மருத்துவர், இதயநோய் நிபுணர் மற்றும் பொது மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, அவர் உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று அதிகாலை 5:00 மணியளவில், அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டார்.
