ADDED : பிப் 10, 2025 05:41 AM

மைசூரு: மைசூரில் கூடுதலாக, 'நம்ம கிளினிக்'குகள் திறக்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால், 1.50 லட்சம் மக்கள் பயன் அடைவர்.
இது குறித்து, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரில் புதிதாக நம்ம கிளினிக்குகள் திறக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகர பஸ் நிலையங்கள், கிராமப்புற பஸ் நிலையங்கள், சாமுண்டி மலை, புதிய லே அவுட்டுகள் உட்பட 12 இடங்களில் நம்ம கிளினிக்குகள் திறக்கப்படும். இதனால் கூடுதலாக 1.60 லட்சம் பேருக்கு சிகிச்சை வசதி கிடைக்கும்.
மைசூரு மாநகராட்சியின் 65 வார்டுகளில் நகர ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.
இது தவிர இரண்டு சமுதாய மையங்கள், இரண்டு தாய், சேய் மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனை, கே.ஆர்.மருத்துவமனை, செலுவாம்பா, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிரவுமா கேர், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனைகளும் உள்ளன.
மைசூரு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. வட்ட சாலையில் இருந்து, 15 கி.மீ., துாரம் வரை, நகர் விரிவடைந்துள்ளது.
இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட லே - அவுட்களில், அரசு மருத்துவமனை வசதி இல்லை. சிறு சிறு உடல்நிலை பிரச்னைகளுக்கும், 10 கி.மீ., துாரத்துக்கும் மேலாக செல்ல வேண்டியுள்ளது.
எனவே புதிய லே - அவுட்களில் 'நம்ம கிளினிக்' அமைக்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. 15,000 முதல் 20,000 மக்களுக்கு ஒன்று வீதம், ஒன்பது இடங்களில் நம்ம கிளினிக்குகள் செயல்படுகின்றன. தற்போது புதிதாக 12 கிளினிக்குகள் திறக்க, தயாராகி வருகிறோம்.
சாமுண்டி மலையிலும் கூட கட்டடம் கிடைத்துள்ளது. மற்ற இடங்களிலும் நம்ம கிளினிக்களுக்கு இடம் தேடப்பட்டு வருகிறது.
தாய், சேய் சிகிச்சை, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடுவது, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை புற்று பரிசோதனை, கண் பரிசோதனை, மனநல சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. புதிய இடங்களில் கிளினிக் திறந்தால், மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

