ஆந்திராவில் பா.ஜ., தெலுங்குதேசம் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது
ஆந்திராவில் பா.ஜ., தெலுங்குதேசம் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது
UPDATED : மார் 09, 2024 05:53 PM
ADDED : மார் 09, 2024 05:43 PM

புதுடில்லி: ஆந்திராவில், பா.ஜ., தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டதை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உறுதி செய்துள்ளார்.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலோடு சேர்த்து அம்மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக, அவர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். பாஜ.,வையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பா.ஜ., தலைவர் நட்டாவையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதியானது.
இந்நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளை பகிர்ந்து கொள்வது குறித்து பாஜ., தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. இதனை, சந்திரபாபு நாயுடுவும் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ., தெலுங்குதேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது. வரும் தேர்தலில் இக்கூட்டணி அமோக வெற்றி பெறும். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. விரைவில் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்‛‛, என்றார்.