கர்நாடகாவில் இன்று புறநோயாளிகள் பிரிவு மூடல்! கோல்கட்டா சம்பவத்தை கண்டித்து போராட்டம்
கர்நாடகாவில் இன்று புறநோயாளிகள் பிரிவு மூடல்! கோல்கட்டா சம்பவத்தை கண்டித்து போராட்டம்
ADDED : ஆக 16, 2024 11:03 PM

பெங்களூரு : கோல்கட்டா ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில், பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, கர்நாடகாவில் இன்று தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகளின் மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இதன்படி, இன்று காலை 6:00 முதல், மாலை 6:00 மணி வரை தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவுகள் மூடப்படுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு முதுநிலை படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயினும், இதில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அவர்களை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு காப்பாற்றி வருவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி - தார்வாட், பெலகாவி, கலபுரகி உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* ஐ.எம்.ஏ.,
இதற்கிடையில், ஐ.எம்.ஏ., எனும் இந்திய மருத்துவ அசோசியேஷன், நாடு முழுதும் இன்று ஒரு நாள் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ கல்லுாரி மாணவர்களும், பணியை புறக்கணித்து கண்டன போராட்டம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், இன்று காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை 12 மணி நேரம், ஓ.பி.டி., எனும் புறநோயாளிகள் பிரிவு மூடப்படுகின்றன. சிறார்கள், பெரியோர்களுக்கு ஓ.பி.டி., சேவை கிடைக்காது.
மேலும், தனியார் நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகளும் மூடப்பட உள்ளன. அதே நேரம், அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.
* அமைப்புகள் ஆதரவு
இந்த போராட்டத்துக்கு, இந்திய மருத்துவ அசோசியேஷன் நிர்வாகத்துக்கு உட்பட்ட மருத்துவர்கள்; தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு; அரசு மருத்துவர்கள் அசோசியேஷன்; குழந்தைகள் மருத்துவர்கள் அசோசியேஷன், ஆர்த்தோபடிக் அசோசியேஷன் மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அசோசியேஷன், கர்நாடக அரசு மருத்துவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே, பொது மக்கள் அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பெரிய அளவில் மருத்துவர்கள் போராட்டம் நடக்க உள்ளது.
* முன்னெச்சரிக்கை
இது குறித்து, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
சரியான நோக்கத்துக்காக தான் மருத்துவர்கள் போராட்டம் நடத்தப்படுகிறது. அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்துகின்றனர். அதே நேரம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்தட்டும். நோயாளிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாத வகையில், அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தால், அவசர அறுவை சிகிச்சைகள், உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.