மூத்த தலைவர்களை தேடி காங்., - பா.ஜ., வேட்பாளர்கள் ஓட்டம்! தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி காலில் விழுந்து கெஞ்சல்
மூத்த தலைவர்களை தேடி காங்., - பா.ஜ., வேட்பாளர்கள் ஓட்டம்! தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி காலில் விழுந்து கெஞ்சல்
ADDED : ஏப் 10, 2024 05:37 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், மூத்த தலைவர்களை தேடி ஓடுகின்றனர். தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி, அவர்களது காலில் விழுந்து கெஞ்சுகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7ம் தேதிகளில், இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய 14 தொகுதிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கி உள்ளனர். இவர்களை ஆதரித்து கட்சிகளின் தலைவர்களும், பிரசாரம் செய்து வருகின்றனர்.
முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், காங்கிரஸ், பா.ஜ., கட்சியில் அதிருப்தி வெடித்தது. சீட் கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக கலகம் செய்தனர். அத்தகையவர்களை ஒருவழியாக சமாதானப்படுத்தினர். ஆனாலும் இன்னும் சிலரின் நடவடிக்கை, மர்மமாகவே உள்ளது. அவர்களால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்று, வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். வெற்றி பெறுவதற்காக, யார் காலை வேண்டும் என்றாலும் தயாராகி வருகின்றனர்.
* திடீர் மவுசு
இந்நிலையில், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளின் மூத்த தலைவர்களாக இருந்து, கட்சியால் ஓரம்கட்டப்பட்டு இருப்பவர்களுக்கு, இப்போது திடீரென மவுசு அதிகரித்து உள்ளது. காங்கிரசில் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, 2017ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். ஆனால், அவரை கட்சி பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
இதனால் அவர் வீட்டிலேயே முடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, கட்சிக்கு ஆதரவாக பெரிதாக பிரசாரம் செய்யவில்லை. ஆனால், இப்போது அவருக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. பழைய மைசூரில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ள கிருஷ்ணாவின் ஆதரவை பெற்றால் எளிதில் வெற்றி பெறலாம் என்று, வேட்பாளர்கள் கணக்கு போட துவங்கி உள்ளனர்.
* சீனிவாச பிரசாத்
மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும், வெங்கடரமணேகவுடா என்ற ஸ்டார் சந்துரு, கிருஷ்ணாவை சந்தித்து, தன்னை ஆதரிக்கும்படி காலில் விழுந்து ஆசி பெற்றார். இதை பார்த்த குமாரசாமி, உன்னை விட நான் குறைந்தவன் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கிருஷ்ணாவை தேடி சென்று அவரது காலில் விழுந்து, தேர்தலில் நான் வெற்றி பெற உதவுங்கள் என்று கெஞ்சி உள்ளார்.
இதுபோல காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து, சாம்ராஜ் நகர் எம்.பி.,யான சீனிவாச பிரசாத்துக்கும் மவுசு எகிறி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போஸ் ஒரு பக்கம், சீனிவாஸ் பிரசாத் காலில் விழுந்து கெஞ்சினால், சாம்ராஜ் நகர் பா.ஜ., வேட்பாளர் பால்ராஜும், சீனிவாச பிரசாத்திடம் சென்று, 'உங்களை தான் மலை போல் நம்பி இருக்கிறேன். எப்படியாவது என்னை வெற்றி பெற வையுங்கள்' என்று, கெஞ்சி இருக்கிறார்.
* அதிருப்தி
தட்சிண கன்னடாவின் காங்கிரஸ் வேட்பாளர் பத்மராஜும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன பூஜாரியை சந்தித்து, ஆதரவு கேட்டு உள்ளார். துமகூரு பா.ஜ., வேட்பாளர் சோமண்ணாவும், துமகூரில் உள்ள பா.ஜ., மூத்த தலைவர்கள் வீட்டிற்கு சென்று, தன்னை ஆதரிக்கும்படி கேட்டு இருக்கிறார். இன்னும் பல தொகுதிகளில் மூத்த தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும், தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படியும் கெஞ்சி வருகின்றனர்.
அதே நேரம், இப்போது அடிக்கும் வெயிலை பார்த்து, வெளியே செல்லவே மூத்த தலைவர்கள் அஞ்சுகின்றனர். 'என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை. எனது ஆதரவாளர்களை உங்களுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய சொல்கிறேன்' என்று, வேட்பாளர்களிடம் நைசாக பேசி அனுப்பி வைக்கின்றனர்.
'இவ்வளவு நாளாக நம்மை பார்க்க யாரும் வரவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்' என்று, மூத்த தலைவர்கள் சிலர், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
***

