கவர்னருக்கு எதிரான வழக்கில் இன்று... விசாரணை! 'மூடா' விவகாரத்தில் தப்புவாரா சித்தராமையா?
கவர்னருக்கு எதிரான வழக்கில் இன்று... விசாரணை! 'மூடா' விவகாரத்தில் தப்புவாரா சித்தராமையா?
ADDED : ஆக 29, 2024 02:55 AM
பெங்களூரு: மூடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இந்த விசாரணையில் இருந்து முதல்வர் தப்புவாரா என்ற எதிர்பார்ப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கியது. இதில், முதல்வர் முறைகேடு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்திருந்தார்.
பின், முதல்வரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அவர் புகார் அளித்தார். இது போன்று, மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோரும், முதல்வர் மீது கவர்னரிடம் அடுத்தடுத்து புகார்கள் அளித்தனர்.
சீனியர் வக்கீல்
இதை ஏற்றுக்கொண்ட கவர்னர், முதல்வர் சித்தராமையா மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்த, இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி வலியுறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இம்மாதம் 19ம் தேதி, முதல்வர் தரப்பில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை, அவசர வழக்காக கருதி நீதிபதி நாகபிரசன்னா விசாரணை நடத்தினார். அப்போது, முதல்வர் எந்த விதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று முதல்வர் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார்.
இதே வேளையில், 'முதல்வர் முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதால் தான் அவர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது' என்று கவர்னர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.
மதியம் 2:30 மணி
பின், இம்மனு மீது 29ம் தேதி (இன்று) மதியம் 2:30 மணிக்கு விசாரணை நடத்துவதாக நீதிபதி நாகபிரசன்னா ஒத்திவைத்தார். மேலும், முதல்வர் மீது ஸ்நேகமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதும் இன்று வரை விசாரணையை ஒத்திவைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்படி, இன்று மதியம் 2:30 மணிக்கு, முதல்வர் தொடர்ந்துள்ள ரிட் மனு மீது விசாரணை நடக்கிறது. முதல்வர் தரப்பில் வாதாட அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு, இன்று காலை பெங்களூரு வருகிறது. கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லியில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக உள்ளார்.
நீதிமன்றத்தில் இன்றே விசாரணை முடிந்து விடுமா? நீதிபதி மீண்டும் ஏதாவது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பாரா? முதல்வருக்கு எதிராக உத்தரவு வருமா அல்லது கவர்னருக்கு எதிராக வருமா என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
ஒரு வேளை முதல்வருக்கு எதிராக உத்தரவு வந்தால், உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வதற்காகவும், டில்லியில் வழக்கறிஞர்கள் குழு தயாராக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை, முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா செய்துள்ளார். இதுபோன்று, கவர்னருக்கு எதிராக உத்தரவு வந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில், 'நீதிமன்றத்தின் உத்தரவு வரும் முன்னரே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது' என்று பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.