ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் ரூ. 15 கோடி நகைகள் திருட்டு
ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் ரூ. 15 கோடி நகைகள் திருட்டு
ADDED : நவ 09, 2024 11:04 PM
விஜயநகர்: குஜராத்தைச் சேர்ந்த தங்க நகைக்கடை உரிமையாளர் வீட்டில், 18.4 கிலோ தங்க நகைகள், 40 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது. நேபாளத்துக்கு தப்பிச் சென்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரின் விஜயநகரில் வசிக்கும் சுரேந்திர குமார் ஜெயின், தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஏழு பேர் வேலை செய்கின்றனர். ஆறு பேர் அவரவர் வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால் காவலாளியாக பணியாற்றிய நம்ராஜ், 36, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கு வீடு இல்லாததால், சுரேந்திர குமார் ஜெயின், தன் வீட்டின் வாகன பார்க்கிங் பகுதியில் வீடு கட்டி கொடுத்திருந்தார்.
கடந்த ஆறு மாதங்களாக, இந்த வீட்டில் தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் நம்ராஜ் வசித்தார். நகைக்கடையில் வேலை செய்ததுடன், சுரேந்திரகுமார் ஜெயின் வீட்டில், தோட்ட பராமரிப்பு உட்பட, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். வீடு மற்றும் நகைக்கடையின் அனைத்து விபரங்களும் நம்ராஜுக்கு தெரிந்திருந்தது.
தன் சொந்த ஊர் இருக்கும் குஜராத் மாநிலத்தில் நடந்த திருவிழாவிற்காக, சுரேந்திர குமார் ஜெயின், நவம்பர் 1ம் தேதி மாலை குடும்பத்துடன் அங்கு சென்றார். புறப்படுவதற்கு முன்பு, பாதுகாப்பை கருதி, கடையில் இருந்த சில தங்க, வைர நகைகளை தன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார். அவரது சகோதரிகளின் நகைகளும் கூட, இங்கிருந்தன.
ஒரு வாரத்துக்கு பின், சுரேந்திர குமார் ஜெயின் வீடு திரும்பினார். வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய 18.4 கிலோ தங்க நகைகள், 40.80 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன.
காவலாளி நம்ராஜ், குடும்பத்தினர் மாயமாகி இருந்தனர். அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, உரிமையாளரின் வீட்டில் நகைகள், பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக, விஜயநகர் போலீஸ் நிலையத்தில், சுரேந்திர குமார் ஜெயின் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். போலீசார் குழுவினர் நேபாளுக்கு சென்றுள்ளனர்.