வாலிபர் கொலையில் இருவருக்கு காப்பு காதல் தொல்லையால் கொன்றது அம்பலம்
வாலிபர் கொலையில் இருவருக்கு காப்பு காதல் தொல்லையால் கொன்றது அம்பலம்
ADDED : ஜன 25, 2024 04:28 AM
ராம்நகர், : தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடந்த வழக்கில், இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். காதல் தொல்லை கொடுத்ததால், கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
ராம்நகர் ரயில் நிலையத்தில் இருந்து, சில அடி துாரத்தில் ரயில் தண்டவாளம் அருகே, கடந்த 21ம் தேதி வாலிபர் இறந்து கிடந்தார். பெங்களூரு சிட்டி ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர், ராம்நகரின் அர்பாஸ் பாஷா, 25, என்பது தெரிய வந்தது.
அவரது மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ராம்நகரின் சையது இலியாஸ், 26, என்பவருடன், கடைசியாக பேசியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை, ரயில்வே போலீசார் பிடித்தனர். இதில், தன் நண்பரான ஜாகிர் என்ற கல்லு, 24, என்பவருடன் சேர்ந்து, அர்பாஸ் பாஷாவை கொன்றதை ஒப்புக்கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சையது இலியாஸின் சகோதரியை, அர்பாஸ் பாஷா பின்தொடர்ந்து சென்று, காதல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் ஜாகிரின் தாயை பற்றியும், அர்பாஸ் ஆபாசமாக பேசி இருந்தார். இதனால் சையது இலியாசும், ஜாகிரும் சேர்ந்து, அர்பாஸ் பாஷாவை கொல்ல திட்டம் தீட்டினர்.
கடந்த 21ம் தேதி, தண்டவாளத்தின் அருகில் அழைத்துச் சென்று, கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். உடலை எரிப்பதற்காக, பெட்ரோல் வாங்கிவிட்டு வந்தனர்.
அப்போது தண்டவாள பகுதியில், பயணியர் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்து தப்பிச் சென்றது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.