கேரள பள்ளி பாட புத்தகங்களில் அரசியலமைப்பு முகப்புரை சேர்ப்பு
கேரள பள்ளி பாட புத்தகங்களில் அரசியலமைப்பு முகப்புரை சேர்ப்பு
UPDATED : ஜன 18, 2024 05:39 AM
ADDED : ஜன 18, 2024 01:23 AM

திருவனந்தபுரம், கேரளாவில், புதிய -பாடத்திட்டத்தின் கீழ் வெளியாக உள்ள பள்ளி பாட புத்தகங்களின் துவக்கத்தில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை சேர்க்க முடிவு செய்துஉள்ளனர்.
ஒப்புதல்
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு பள்ளி பாடத்திட்டம் 10 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் இருந்தது. புதிய பாடத்திட்டங்களின் கீழ் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்களை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.
மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி தலைமையிலான பாடத்திட்ட வழிகாட்டுதல் குழு, ஒன்பதாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 173 புத்தகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புத்தகங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், புதிய பாட புத்தகங்களின் முதல் பக்கத்தில் இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையை சேர்க்க உள்ளனர்.
வழிகாட்டுதல்
இதற்கான அறிவிப்பை கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையிலான பாடத்திட்ட வழிகாட்டுதல் குழு நேற்று முன் தினம் வெளியிட்டது.
மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் பாட புத்தகங்களில் ஏற்கனவே இந்திய அரசியலமைப்பின் முகப்புரை இடம்பெற்றுள்ளது. தற்போது கேரள அரசும்,
அரசியலமைப்பின் மதிப்பீடுகளை மாணவர்களின் மனங்களில் பதிய வைக்க இந்த முடிவை எடுத்துள்ளது.
கேரள பள்ளி கல்வி துறையில் முதன் முறையாக ஒவ்வொரு பாட புத்தகத்தின் துவக்கத்திலும் அரசியலமைப்பின் முகப்புரை சேர்க்கப்பட்டு அச்சிடப்பட உள்ளது.