வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்
வருமான வரி மசோதா அறிக்கை இன்று தாக்கல்! ...: பெரும் பரபரப்புடன் கூடுகிறது பார்லிமென்ட்
ADDED : ஜூலை 21, 2025 12:01 AM

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் சூழலில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், பெரும் பரபரப்புகளுக்கு இடையே இன்று துவங்குகிறது. முதல் நாளிலேயே, புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை தாக்கலாகிறது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி, ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது.
கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் மும்முரமாகி வருகின்றன.
தேர்வுக்குழு
கடந்த 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமான வரி மசோதா பல திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த வைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 பேர் கொண்ட பார்லிமென்ட் தேர்வுக் குழுவை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்தார். இக்குழு, மசோதாவை ஆராய்ந்து 285 யோசனைகளை முன்வைத்தது.
கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் அந்த யோசனைகள் ஏற்கப்பட்ட நிலையில், புதிய வருமான வரி மசோதா தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை இன்று தாக்கலாகிறது.
கடந்த 1961ல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் நீக்கப்பட்டு, பாதியாக சுருக்கப்பட்ட வடிவில் புதிய வருமான வரி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
பழைய சட்டத்தில் 5.12 லட்சம் வார்த்தைகள் இடம் பெற்றிருந்த நிலையில், புதிய மசோதாவில் 2.6 லட்சம் வார்த்தைகளே இடம் பிடித்துள்ளன.
அதே போல், 819 பிரிவுகள் பழைய சட்டத்தில் இடம்பிடித்திருந்த நிலையில், அது 536 பிரிவுகளாக சுருக்கப்பட்டுஉள்ளது. பழைய சட்டத்தில் இருந்த 47 அத்தியாயங்கள், தற்போது 23 ஆக குறைகிறது.
வரி பிடித்தம்
வரி விலக்கு தொடர்பான ஷரத்துகளும் முன்பு இருந்ததை விட தற்போது புரியும் வகையில் சுருக்கப்பட்டுள்ளன. டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே வரி பிடித்தம் உள்ளிட்ட வரிகள் அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாய்க்கான வரி அடுத்த ஆண்டில் செலுத்தப்பட்டு வருகிறது. இதை மதிப்பீட்டு ஆண்டு என குறிப்பிடப்படுகிறது. இந்த சொற்களும் புதிய வருமான வரி மசோதாவில் எளிமைப்படுத்தி, வரி ஆண்டு என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.