வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை
வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை
ADDED : மார் 05, 2025 06:33 AM

புதுடில்லி: வரி ஏய்ப்பு அல்லது சொத்து விபரங்களை ஒருவர் மறைப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள், முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான, 'ஆன்லைன்' கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சட்டப்பூர்வமான உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு, 132ன் கீழ், ஒரு நபர் வரி ஏய்ப்பு நோக்கத்துடன் தன் வருமானம், சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைப்பதாக நம்பகமான தகவல் இருந்தால், வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் மற்றும் பறிமுதல்களை மேற்கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட நபர் கணக்கில் காட்டாத சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவரது வீடு, பாதுகாப்பு பெட்டகம், வங்கி லாக்கர் உள்ளிட்டவற்றை உடைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
நவீன மாற்றம்
தற்போது நிதி பரிவர்த்தனைகள், 'டிஜிட்டல்' மயமாகிவிட்டதால், வரித்துறை அதிகாரிகளின் விசாரணை முறை மற்றும் அதிகாரங்கள் நவீன மாற்றத்தை நோக்கி நகர்கின்றன. பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவின்படி, வரி விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது.
சர்ச்சையை கிளப்புமா?
இதன்படி, 2026, ஏப்., 1 முதல், வருமான வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை, டிஜிட்டல் தளங்களுக்கும் விரிவடைகிறது. இந்த புதிய சட்டத்தின்படி ஒருவர் தன் வருமானம், முதலீடு அல்லது சொத்துக்கள் குறித்து முழுமையான தகவல்களை பகிரவில்லை என வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள்.
முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான ஆன்லைன் கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்யலாம். புதிய வருமான வரி மசோதா இந்த அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. இருப்பினும், இந்த மாற்றம் வரி ஏய்ப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்குமா அல்லது தனியுரிமை தலையீடு என்ற சர்ச்சையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.