ADDED : மார் 19, 2024 10:27 PM
பெங்களூரு : 'மேகனா புட்ஸ்' உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு, 'மேகனா புட்ஸ்' என்ற பெயரில் அசைவ உணவகங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக இங்கு செய்யப்படும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பெங்களூரு நகரிலும், கோரமங்களா, ஜெயநகர், இந்திராநகர், ரெசிடென்சி சாலை, சிங்கசந்திரா, மாரத்தஹள்ளி ஆகிய இடங்களில் மேகனா புட்ஸ் உணவகங்கள் உள்ளன. பத்மா அட்லுாரி, ராம்பாபு மாண்டவா ஆகியோர் இந்த உணவகங்களின் உரிமையாளர்கள். இந்த உணவகங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறைக்கு தகவல்கிடைத்தது.
இதன் அடிப்படையில், பெங்களூரின் கோரமங்களா, இந்திராநகர் உட்பட அந்நிறுவனத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், கர்நாடகா மற்றும் கோவா மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதிகாரிகளை பார்த்ததும், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலாளர் உட்பட ஊழியர்களிடமும் தினமும் நடக்கும் வியாபாரம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.
உணவகத்தில் இருந்த கணக்கு புத்தகங்கள், கணினியில் உள்ள தகவல்களை அலசி ஆராய்ந்தனர். வங்கிக் கணக்குகளையும் பரிசீலித்தனர். இறுதியில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி செய்து எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

