ஊழியர்களால் விபத்துகள் அதிகரிப்பு; டெலிவரிக்கான காலத்தை மாற்றவும்: 'ஸ்விக்கி, சொமேட்டா'வுக்கு கேரளா உத்தரவு
ஊழியர்களால் விபத்துகள் அதிகரிப்பு; டெலிவரிக்கான காலத்தை மாற்றவும்: 'ஸ்விக்கி, சொமேட்டா'வுக்கு கேரளா உத்தரவு
ADDED : டிச 25, 2025 01:34 AM

திருவனந்தபுரம்: ஆன்லைன் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நிலையில், அந்நிறுவனங்களுக்கு கேரள அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'ஸ்விக்கி, சொமேட்டா, பிளிங்கட்' போன்ற நிறுவனங்கள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
குறைந்த நிமிடத்தில் வீடு தேடி பொருட்கள் தரப்படும் என்ற உத்தரவாதத்துடன், இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், அந்நிறுவனங்களின் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளாவிலும், இந்நிறுவனங்களின் ஊழியர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதாகவும், ஹெல்மெட் அணியாமல் செல்வதாகவும் புகார்கள் குவிந்தன. இந்நிலையில், ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு, கேரள மோட்டார் வாகனத் துறை அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆன்லைன் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வழங்க வாகனங்களில் அதிவேகமாக செல்கின்றனர். இதனால், சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடுத்த, 15 நாட்களுக்குள், சாலை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒத்துப்போகும் வகையில் தங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டும்.
தொழில் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விரைந்து வழங்க ஊழியர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். சாலை விதிகள், போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றி புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக மோட்டார் வாகனத் துறைக்கு பதில் அனுப்ப வேண்டும். வணிக போட்டிக்காக, மக்களின் உயிருடன் விளையாடுவதை ஏற்க முடியாது. தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

