சீன பூண்டு வரவு அதிகரிப்பு கர்நாடக விவசாயிகள் கவலை
சீன பூண்டு வரவு அதிகரிப்பு கர்நாடக விவசாயிகள் கவலை
ADDED : அக் 03, 2024 12:57 AM
மங்களூரு,
கர்நாடகாவின் தக் ஷிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிவமொகா பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பூண்டு விவசாயம் செய்கின்றனர். அதன் விற்பனையைப் பொறுத்தே அவர்களின் வாழ்வாதாரம் அமைந்துஉள்ளது.
சமீபகாலமாக சீனப் பூண்டு வரவு அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மலிவு விலையில் விற்கப்படும் சீனப் பூண்டை மக்கள் விரும்பி வாங்குவதால், சந்தைகளில் இந்திய பூண்டு தேக்கம் அடைந்துள்ளது.
இதையடுத்து, உடுப்பி ஏ.பி.எம்.சி., விவசாய உற்பத்தி பொருள் விற்பனை சந்தையில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்த சீனப் பூண்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி கமிஷனர் ராயப்பா தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த 12 டன் சீனப் பூண்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். சீனப் பூண்டின் தன்மையை சோதனை செய்த பின்னரே, அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனப்பூண்டு வரவு குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாகவே சந்தையில் சீனப் பூண்டின் வரத்து அதிகரித்துள்ளது. இது வழக்கமாக நிகழும் ஒன்றுதான். அளவில் பெரியதாகவும், மலிவு விலையில் கிடைப்பதாலும் சீனப் பூண்டை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
'நம் நாட்டு பூண்டு கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; சீனப் பூண்டு 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனப் பூண்டின் வருகையால், இந்திய பூண்டின் விலை 150 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது' என தெரிவித்தனர்.
சீனப் பூண்டு வரவால் கவலையடைந்துள்ள கர்நாடக விவசாயிகள், அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.