ADDED : பிப் 10, 2025 04:19 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பசுக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அவற்றை வளர்க்கும் திட்டத்தை உ.பி., அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக நான்கு பசுக்கள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றை பராமரிக்கும் வகையில், தலா ஒரு பசுவிற்கு தினசரி 30 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பசுக்கள் மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் நபர்களின் செலவு தொகையை தொடர்ந்து அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. இதை கருத்தில் வைத்து, பராமரிப்பு செலவு தொகை 30 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக அதிகரித்து வழங்க அமைச்சர் தரம்பால் சிங் உத்தரவிட்டார்.

