கிரீமி லேயர் வரம்பு அதிகரிப்பு மஹா., அமைச்சரவை ஒப்புதல்
கிரீமி லேயர் வரம்பு அதிகரிப்பு மஹா., அமைச்சரவை ஒப்புதல்
ADDED : அக் 11, 2024 03:09 AM

மும்பை,: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி, மொத்தமுள்ள 48ல், 18ல் மட்டுமே வென்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - காங்., - சரத் பவாரின் தேசியவாத
காங்., அடங்கிய, 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி 30 இடங்களில் வென்றது.
இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், மஹாராஷ்டிரா மாநில அட்டவணை ஜாதி கமிஷனுக்கு அரசியலமைப்பு
அந்தஸ்து வழங்குவதற்கான வரைவு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே, கிரீமி லேயரில் சேர்ப்பதற்கான வருமான அளவுகோலை 8 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு முன், கிரீமி லேயர் உச்ச வரம்பு, 6 லட்சம் ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதன்படி, தேர்தலில் பா.ஜ., ஹாட்ரிக் வெற்றி பெற்றது. தற்போது இதே பாணியை, 'மஹாயுதி' கூட்டணி மஹாராஷ்டிராவில் பின்பற்றி உள்ளது.

