ADDED : நவ 01, 2024 07:06 AM
பெங்களூரு: சில மாதங்களாக, கர்நாடகாவில் பரவலாக மழை பெய்வதால், அணைகள் நிரம்பின. இதன் பயனாக நீர் மின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் பரவலாக மழை பெய்தது. அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் லிங்கனமக்கி, சூபா, மானி அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
கடந்த 2023ல் மழை பற்றாக்குறை ஏற்பட்டது. மூன்று முக்கிய அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. நீர் மின் உற்பத்தி குறைந்ததால், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அழுத்தம் அதிகரித்தது. அனைத்து யூனிட்களும் ஓய்வின்றி மின் உற்பத்தி செய்து வந்தன.
நடப்பாண்டு மழைக்காலம் துவங்கிய பின், பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. எனவே அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஷராவதி ஆற்றின் நீர் பாயும் லிங்கனமக்கி, அணை 96.5 சதவீதம்; காளி ஆற்றின் தண்ணீர் பாயும் சூபா அணையில் 90 சதவீதம்; வராஹி ஆற்றின் நீர் பாயும் மாணி அணையில் 94 சதவீதம் தண்ணீர் இருப்புள்ளது.
அணைகளில் தேவையான அளவு தண்ணீர் இருப்புள்ளதால், நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி, ஷராவதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 16.796 மில்லியன் யூனிட்; காளி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 11.966 மில்லியன் யூனிட்; வராஹி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 3.122 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.