போக்குவரத்து கழகங்களின் நஷ்டம் அதிகரிப்பு; 10 ஆண்டாக உயராத டிக்கெட் கட்டணம்
போக்குவரத்து கழகங்களின் நஷ்டம் அதிகரிப்பு; 10 ஆண்டாக உயராத டிக்கெட் கட்டணம்
ADDED : செப் 30, 2024 12:16 AM
பெங்களூரு : கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வடமேற்கு, கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகங்களின் நஷ்டம், 7,625 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கும், 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பஸ்களில் கூட்டம் தான் அதிகமாக காணப்பட்டது. இந்த டிக்கெட்டுகளுக்கான தொகையை போக்குவரத்து துறை, போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கி வருகிறது.
ரூ.6,000 கோடி
ஆனாலும், கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட அனைத்து போக்குவரத்து கழகங்களின் நஷ்டம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 7,625.95 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதிகாரிகள், ஊழியர்களின் ஊதிய பாக்கி, வருங்கால வைப்பு நிதி உட்பட, 6,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவிய போது, போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஊழியர்களுக்கு மாநில அரசே ஊதியம் வழங்கியது; பஸ்கள் வாங்கவும் நிதியுதவி வழங்கியது. இத்தனைக்கு பின்னரும், பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட முடியவில்லை.
கே.எஸ்.ஆர்.டி.சி., 1,815.83 கோடி ரூபாய், பி.எம்.டி.சி., 2,056.30 கோடி ரூபாய், வட மேற்கு போக்குவரத்து கழகம் 2,299.30 கோடி ரூபாய், கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகம் 1,454.52 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளன.
சக்தி திட்டத்துக்கு முன், 2022ல் நான்கு போக்குவரத்து கழகங்களில் 9,020.13 கோடி ரூபாய் வருவாய் வசூலானது. சக்தி திட்டத்துக்கு பின், அரசு வழங்கிய மானியத்தால் இந்த வருவாய் 11,103.43 கோடி ரூபாயானது. ஆனாலும் நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை. 2023ன் ஜூன் 11 முதல், 2024ன் செப்டம்பர் 25 வரை 297.25 கோடி பெண்கள் இலவசமாக பயணித்து உள்ளனர்.
செலவு அதிகரிப்பு
அதிகாரிகள், ஊழியர்களின் ஊதிய உயர்வு, எரிபொருள், உதிரி பாகங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பது, நிர்வகிப்பு செலவு அதிகரிப்பதால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டம் அடைந்துள்ளன.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
போக்குவரத்து கழகங்களின் லாபம், நஷ்டத்தை விட, மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்குவதே, எங்களுக்கு முக்கியம். முந்தைய அரசு 5,900 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து சென்றது.
9,000 ஊழியர்கள்
காங்கிரஸ் அரசு வந்த பின், 6,200 பஸ்கள் வாங்கப்பட்டன. போக்குவரத்து கழகங்களுக்கு 9,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். 1,000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது.
சக்தி திட்டத்தால், போக்குவரத்து கழகங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. 2014 முதல் பி.எம்.டி.சி., பயண கட்டணம், 2020ல் இருந்து மற்ற போக்குவரத்து கழகங்களின் பயண கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக இவற்றின் நஷ்டத்தின் அளவு குறையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறான கொள்கை
அரசின் தவறான கொள்கைகளால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் பரிதவிக்கின்றன. ஆனால் அதிகாரிகள், ஊழியர்களின் உழைப்பால் வருவாய் அதிகரிக்கிறது. பஸ் பயண டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாததாலும், நஷ்டம் அதிகரிக்கிறது.
மாநில அரசுக்கு, பயணியர் மீது சுமையை ஏற்ற விருப்பம் இல்லையென்றால், போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படும். சிந்தியா, சீனிவாச மூர்த்தி கமிட்டிகளின் சிபாரிசுகளை செயல்படுத்த வேண்டும். சக்தி திட்டத்தின் தொகையை, சரியான நேரத்தில் வழங்க வேண்டும் அல்லது பட்ஜெட்டில் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
அனந்த சுப்பராவ்,
தலைவர், கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கம்

