ADDED : செப் 30, 2024 12:06 AM
பெங்களூரு : ''பெங்களூரில் மணிக்கு 5,687 போக்குவரத்து விதிமீறல்கள் சம்பவங்கள் நடக்கின்றன,'' என பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
தற்போதைய புள்ளி - விபரங்களின் படி, மணிக்கு 5,687 போக்குவரத்து விதிமீறல் நடக்கிறது.
போக்குவரத்து சிக்னல்களில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன பயணியரை, அடையாளம் காண்கிறது.
ஒவ்வொரு சந்திப்பிலும், 789 போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கின்றன. தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது குறித்து, அதிகமான வழக்குகள் பதிவாகின்றன. குறிப்பாக ஆடுகோடி, பனசங்கரி, பசவனகுடி, ஹலசூரு, ஜெயநகர், மல்லேஸ்வரம், மைகோ லே - அவுட், ஆர்.டி.நகர், சதாசிவநகர், வி.வி.புரம் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து மீறுவோர் எண்ணிக்கை மிக அதிகம்.
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிகின்றன. இது தவிர போலீசாரும் இயந்திரங்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த இயந்திரங்கள் 2024 ஆகஸ்டில் 1.43 கோடி விதிமீறல் வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

