இந்தியா மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியா மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்!
UPDATED : அக் 04, 2024 10:19 PM
ADDED : அக் 04, 2024 09:31 PM

புதுடில்லி: '' இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது, '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. உலகின் இரண்டு பெரிய பிராந்தியங்களில் போர் நடக்கிறது. உலக பொருளாதாரத்திற்கு இந்த பிராந்தியங்கள் முக்கியமானவை. எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியம். உலகளவில் நிச்சயமற்ற சூழ்நிலையிலும், இந்தியாவின் சகாப்தம் குறித்து பேசுகிறோம். இது இந்தியா மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
இந்தியாவில் முதலீடு செய்வது இதுவே சரியான நேரம் என முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். இது தன்னிச்சையாக நடக்கவில்லை. மத்திய அரசு செய்த சீர்திருத்த நடவடிக்கைளே காரணம். மொபைல்போன்களை இறக்குமதி செய்த நாடாக இருந்த இந்தியா, இன்று ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு துறையிலும், இந்தியாவில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்வோம். இன்று இந்தியா முன்னணி இடத்தை அடைவது மட்டுமல்லாமல், அதனை தக்க வைத்து கொள்ளவும் முயன்று வருகிறது. உள்கட்டமைப்பு துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.