டில்லியில் காலவரையற்ற போராட்டம் துவக்கம்; தமிழக விவசாயிகள் பங்கேற்பு!
டில்லியில் காலவரையற்ற போராட்டம் துவக்கம்; தமிழக விவசாயிகள் பங்கேற்பு!
ADDED : நவ 26, 2024 11:03 AM

புதுடில்லி: 'உச்ச நீதிமன்ற குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
டில்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து இயற்கை சீற்றங்களால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாய பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ம் ஆண்டு முதல் விவசாயிகள் போராடி வருகிறோம்.
போராட்டம்
அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (SKM NP) சார்பில் டில்லியை நோக்கி பேரணி புறப்பட்டோம். ஹரியானா மாநில எல்லை பகுதியில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு, சாலைகளின் குறுக்கே கான்கிரீட் சுவர்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். விவசாயிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை பொருட்படுத்தாத விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே 10 மாதங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து சாலையிலேயே தங்கி போராடி வருகிறார்கள்.
நிர்ணய சட்டம்
விவசாயிகள் பேரணியை தடுப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப்சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு விவசாயிகளிடம் கருத்து கேட்டு கடந்த நவ.,22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அக்குழு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 1990ம் ஆண்டு முதல் இன்று வரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். விவசாயிகள் பிரச்னையை மனிதநேயத்துடன் மத்திய அரசு அணுக வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று கண்னூரி பார்டரில் எஸ்.கே.எம் (NP) தலைவர் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.
பேச்சு வார்த்தை
விவசாயிகள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இதனை ஏற்று மத்திய அரசாங்கம் உடனடியாக நவாப் சிங் பரிந்துரையை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருக்கிறது. ஏற்கனவே வடிகால்கள், தூர்வாரப்படவில்லை. மத்திய அரசு காவிரி டெல்டா கடல் முகத்துவார ஆறுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்யாமல் காலங்கடத்தியது.
நிதி ஒதுங்குங்க!
வெள்ள நீர் முழுமையும் விளை நிலங்களில தேங்கி நின்று குடியிருப்புகளும் விளை நிலங்களும் அழியும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதிகளை மத்திய அரசு தடை இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் துவங்கியது
டில்லியில் விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் துவங்கியது. போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.