வார்டன் காலை முறிப்பேன் சுயேச்சை எம்.எல்.ஏ., அதிரடி
வார்டன் காலை முறிப்பேன் சுயேச்சை எம்.எல்.ஏ., அதிரடி
ADDED : ஜன 10, 2025 11:18 PM

மாண்டியா: பணி நேரத்தில் வீட்டில் இருந்த ஹாஸ்டல் வார்டன் மீது மேலுகோட்டே எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணையா கடும் கோபம் அடைந்தார். “ஹாஸ்டல் பக்கம் வந்தால் உன் காலை முறிப்பேன்,” என, அவர் எச்சரித்தார்.
மாண்டியா, மேலுகோட்டே சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணையா. இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுார் என்ற கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியின் ஹாஸ்டலில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு தங்கி படிக்கும் மாணவ - மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவ - மாணவியர் கூறுகையில், 'எங்களுக்கு சாப்பாடு சரியாக கிடைப்பதில்லை. ஹாஸ்டல் வார்டன் இங்கு வருவதில்லை. அவருக்கு பதிலாக அவர் தாய் தான் வருகிறார்.
எங்களை கண்மூடித்தனமாக திட்டி அடிக்கிறார். இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டுகின்றனர்' என்று கூறி கண்ணீர் விட்டனர்.
இதனால் கடும் கோபம் அடைந்த தர்ஷன் புட்டண்ணையா, ஹாஸ்டல் வார்டனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
“பணி நேரத்தில் இங்கு இல்லாமல் எங்கு இருக்கிறாய்? உன் பொறுப்பு என்ன? நீ பணி செய்ய வேண்டிய இடத்தில், உன் தாயை பணி செய்ய வைத்து இருக்கிறாய்.
உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? அரசு விடுதி என்ன உங்கள் குடும்ப சொத்தா? இனிமேல் நீயும், உனது குடும்பத்தில் யாரும் ஹாஸ்டல் பக்கம் வரவே கூடாது. அப்படி வந்தால் காலை முறிப்பேன்,” என, எச்சரித்தார்.
“உங்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் என்னிடம் சொல்லுங்கள்,” என, மாணவ - மாணவியரிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

