'இண்டி' வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்: அமித் ஷா 'பகீர்'
'இண்டி' வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்: அமித் ஷா 'பகீர்'
ADDED : ஆக 23, 2025 01:14 AM

புதுடில்லி: 'இண்டி' கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி, நக்சல் கொள்கைகளுக்கு ஆதரவானவர் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார்.
கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்த அவர், அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அமித் ஷா பேசியதாவது:
இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே, முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்., நிறுத்தி உள்ளது. சுதர்ஷன் ரெட்டி யார் தெரியுமா? அவர் நீதிபதியாக இருந்தபோது, சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சால்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர்.
அவர் மட்டும் அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020ம் ஆண்டிலேயே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப் பட்டிருக்கும்.
அவற்றை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர்வான அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர் தான் சுதர்ஷன் ரெட்டி. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரசுக்கு, இடதுசாரிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்பதை கேரள மக்கள் போக போக தெரிந்து கொள்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் சால்வா ஜுடும் என்ற அமைப்பு.
இந்த அமைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2011, ஜூலை 5ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக அமர்ந்திருந்தவர் தான் சுதர்ஷன் ரெட்டி.
இந்த அமர்வு, 'காட்டுத் தீயை அணைக்க, மற்றொரு முனையில் தீயை வைப்பது போல, நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி, சத்தீஸ்கர் அரசின் சால்வா ஜுடும் அமைப்பை கலைக்க உத்தரவிட்டது.