பார்லிமென்ட் முன்பு இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம்; உள்ளேயும் கடும் அமளி
பார்லிமென்ட் முன்பு இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம்; உள்ளேயும் கடும் அமளி
ADDED : ஜூலை 24, 2025 12:34 PM

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய வலியுறுத்தி பார்லிமென்ட் முன்பு சோனியா தலைமையில் இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி, கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு நோட்டீஸையும் சபாநாயகர் நிராகரித்தார். இதனால், அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதபடி இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் அவைகளை முடக்கி வருகின்றனர்.
மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் இன்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு, பார்லிமென்ட்டின் உள்ளேயும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, ராஜ்யசபாவில் தமிழகத்தைச் சேர்ந்த பதவிகாலம் முடிந்த எம்.பி.,க்களின் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.