இந்தியா, ஆப்கன் உறவை வலுப்படுத்த உறுதி: இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் பேச்சு
இந்தியா, ஆப்கன் உறவை வலுப்படுத்த உறுதி: இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் பேச்சு
ADDED : நவ 25, 2025 07:19 AM

புதுடில்லி: வர்த்தகம், பொருளாதார உறவுகளை மேம்படுத்த இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
5 நாட்கள் அரசு முறை பயணமாக, இந்தியா உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான உறவை மேம்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி புதுடில்லி வந்துள்ளார்.
அவர் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவை மேம்படுத்துவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தனர். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, பியூஷ் கோயல் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜியை இன்று சந்தித்தேன். பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தினோம்.
பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார். இந்த சந்திப்பு குறித்து ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி கூறியதாவது:
இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மீண்டும் நெருக்கமாக செயல்படுவதை தனக்கு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகத்தில் மட்டும் அல்ல, அவர்களுடன் எங்களுக்கு மிக சிறந்த அரசியல் உறவும் உள்ளது. இப்போது நாங்கள் அரசியல், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிவற்றை வலுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

