மம்தா முடிவுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் பிடிவாதம் காரணமா?
மம்தா முடிவுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் பிடிவாதம் காரணமா?
UPDATED : ஜன 24, 2024 04:19 PM
ADDED : ஜன 24, 2024 04:15 PM

கோல்கட்டா: மே.வங்கத்தில் ‛ இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிடிவாதம் காட்டினார் எனவும், இதனால் தான் மம்தா தனித்து களமிறங்க போவதாக அறிவித்துள்ளார்' என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛ இண்டியா ' என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா உள்ளிட்டோர் காங்கிரசை விமர்சித்து வந்ததனர்.
தேசிய அளவில் காங்கிரஸ் பெரிய கட்சிகளாக இருந்தாலும் மாநில அளவில் கூட்டணிக்கு தாங்கள் தான் தலைமை வகிப்போம் எனவும், தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக மே.வங்க மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் இரண்டை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க மம்தா முன்வந்தார். ஆனால், இதனை ஏற்காத காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி மம்தா கூறும் போது, கடந்த கால காங்கிரஸ் வரலாறுகளை சுட்டிக்காட்டி, அக்கட்சி அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பது நியாயம் அற்றது என்றார்.
ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க மாநில தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தங்களுக்கு கவுரவமான தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மம்தாவின் கருணையினால் மட்டும் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். மம்தா வழங்கும் அந்த இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ., மற்றும் திரிணமுல் கட்சியை காங்கிரஸ் வீழ்த்தும். எப்படி தேர்தலை சந்திப்பது என்பது குறித்து காங்கிரசுக்கு தெரியும். மம்தா பானர்ஜி சந்தர்ப்பவாத தலைவர். 2011ல் காங்கிரஸ் உதவியுடன் தான் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இச்சூழ்நிலையில் தான் மம்தா கூறுகையில், ‛ மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது. திரிணமுல் தனித்தே போட்டியிடும். தேசிய அளவில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்' என அறிவித்து, ‛ இண்டியா' கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

