UPDATED : பிப் 19, 2024 02:09 AM
ADDED : பிப் 17, 2024 11:08 PM

பாட்னா : 'நிதீஷ் குமாருக்காக எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதற்கு, ''இண்டியா கூட்டணியில் எதுவும் சரியில்லை. அங்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்பில்லை,'' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
---பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன், மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்தார் நிதீஷ் குமார். மேலும், 28 கட்சிகள் இருந்த எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி, அந்த கூட்டணியில் இருந்து நிதீஷ் விலகினார். பா.ஜ.,வுடன் மீண்டும் இணைந்து, அதே நாளில் ஒன்பதாவது முறையாக பீஹார் முதல்வரானார். இண்டியா கூட்டணியில், தான் நினைத்தது நடக்கவில்லை என்றும் விமர்சித்து, அதில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, 15ம் தேதி பீஹார் சட்டசபைக்கு, கட்சி வேட்பாளர்களுடன் லாலு பிரசாத் யாதவ் வந்திருந்தார். அப்போது, லாலுவும், நிதீஷ் குமாரும் கைகுலுக்கி, பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த லாலு பிரசாத், 'எங்களுடைய கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. நிதீஷ் குமார் மீண்டும் வந்தால் வரவேற்போம்' என்றுகூறியிருந்தார்.
இது குறித்து பாட்னாவில் நிதீஷ் குமார் நேற்று கூறியதாவது:
கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருடனும் நல்ல நட்பை வைத்துள்ளேன். அந்த வகையில், லாலு பிரசாத் யாதவை சந்தித்தபோது கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து பேசிக் கொண்டிருந்தேன்.
இதற்காக இண்டியா கூட்டணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று அர்த்தம் அல்ல; அதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு நிலைமை சரியில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். கூட்டணிக்கு, இண்டியா என்று பெயரிட்டதை நான் விரும்பவில்லை. நான் வேறு பெயரைமனதில் வைத்திருந்தேன்.
எனக்காக கதவுகள் திறந்திருப்பதாக அவர்கள் கூறலாம்; ஆனால், அங்கு எதுவும் சரியில்லை; அதனால் தான் வெளியேறினேன்.
தற்போது ஜம்மு -- காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, உத்தர பிரதேசத்தின் ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகியவையும் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைஏற்பட்டுள்ளது.
அங்கு இருந்த வரை, கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டேன். ஆனால், அங்கு எதுவுமே சரியில்லை. அதனால், மீண்டும் இண்டியா கூட்டணியில் சேரும் வாய்ப்பு இல்லை.பீஹார் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற்று வதில் ஈடுபட்டுள்ளேன். அதனால், இது போன்ற பேச்சுகளை நான் பெரிதுபடுத்துவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.