மக்களின் சொத்து மீது 'கண்' வைக்கும் இண்டியா கூட்டணியினர்: பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்களின் சொத்து மீது 'கண்' வைக்கும் இண்டியா கூட்டணியினர்: பிரதமர் மோடி எச்சரிக்கை
ADDED : ஏப் 22, 2024 03:21 PM

அலிகார்: 'காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் உங்களின் சம்பாத்தியம் மற்றும் உங்களின் சொத்துக்களில்தான் தங்கள் கண்களை வைத்துள்ளது. இது பற்றி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உ.பி., மாநிலம் அலிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த முறை நான் அலிகார் வந்தபோது, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸின் வாரிசு அரசியல், ஊழல் போன்றவற்றிற்கு பூட்டு போடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். இன்றும் இரு கட்சிகளை சேர்ந்த இளவரசர்கள் அதன் சாவியைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சக்திவாய்ந்த பூட்டை போட்டுவிட்டீர்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் எப்பொழுதும் திருப்திப்படுத்தும் அரசியலையே செய்து வருகின்றன. அவர்கள் முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக எதையும் செய்ததில்லை.
எச்சரிக்கை
இந்த பகுதியில், முத்தலாக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பல மகள்களின் வாழ்க்கை சீரழிந்தது. முத்தலாக் காரணமாக, மகள், தந்தை, சகோதரர், குடும்பத்தினர் என அனைவரும் சிரமப்பட்டனர்.
தற்போது நாங்கள் முத்தலாக் சட்டத்தை இயற்றி அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம். நாட்டு மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் உங்களின் சம்பாத்தியம் மற்றும் உங்களின் சொத்துக்களில்தான் தங்கள் கண்களை வைத்துள்ளன.
தங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை நாங்கள் விசாரிப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது. நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்கத்தை புனிதமாக கருதுகின்றனர். இப்போது இவர்களின் கண்கள் பெண்களின் தாலிகளின் மீது தான் இருக்கிறது. உங்களின் தங்கத்தை திருடுவதுதான் இவர்களின் எண்ணம்.
மாவோயிஸ்ட் சிந்தனை
உங்களது கிராமத்தில் நீங்கள் ஒரு வீடு வைத்திருந்து, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உங்கள் நகரத்தில் ஒரு சிறிய பிளாட் வாங்கியிருந்தால், அவர்கள் (இண்டியா கூட்டணி) இரண்டில் ஒன்றை எடுத்துச் செல்வார்கள். இது மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையாக இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பல நாடுகளை நாசமாக்கிவிட்டார்கள், இப்போது இதே கொள்கையைத்தான் காங்கிரஸ் கட்சியும் இண்டியாக் கூட்டணியும் இந்தியாவில் செயல்படுத்த விரும்புகின்றன.
பா.ஜ., ஆட்சியால் இப்போது நமது உ.பி., தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசர் மூலம் மட்டுமே அடையாளம் காணும் மக்களின் கண்களைத் திறக்க விரும்புகிறேன். சுதந்திரத்திற்கு பிறகு உ.பி.,யில் எந்த தொழில் வளர்ச்சியும் நடக்கவில்லை. ஆனால் யோகியின் ஆட்சி காலத்தில்தான், 'ஒரு மாவட்டம், ஒரே தயாரிப்பு' என்ற அவரது நோக்கம், புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. இதுபோன்ற சகாக்கள் இருப்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

