அமெரிக்காவின் வரி விதிப்பை வாய்ப்பாக மாற்றலாம்: சொல்கிறார் பிரேசில் தூதர்
அமெரிக்காவின் வரி விதிப்பை வாய்ப்பாக மாற்றலாம்: சொல்கிறார் பிரேசில் தூதர்
ADDED : ஆக 09, 2025 06:56 PM

புதுடில்லி: அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியை இந்தியாவும், பிரேசிலும் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என நமது நாட்டுக்கான பிரேசில் தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரேசில் தூதர் கென்னத் பெலிக்ஸ் ஹாசின்ஸ்கி டா நோப்ரேகா கூறியதாவது: பிரேசில் அதிபர் லுலாவும் பிரதமர் மோடியும் சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலையில் இரு தரப்பு உறவுகளை வளர்ச்சி அடையச் செய்வது குறித்து விவாதித்தனர். தன்னிச்சையான வரி விதிப்புகளால் உலக வர்த்தகம் பாதிக்கப்படும். இந்த சவால்களை, இரு தரப்பு உறவுகளுக்கான வாய்ப்புகளாக எப்படி மாற்றலாம் என்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடி பிரேசில் வந்த போது அதிபர் லுலூ உடன் இரு தரப்பு பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
பரஸ்பர வர்த்தக நலனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு, எரிசக்தி, மருந்து, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது என இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய பிரேசில் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

