UPDATED : டிச 03, 2024 03:50 PM
ADDED : டிச 03, 2024 03:47 PM

புதுடில்லி: '' 2020ம் ஆண்டுக்கு பிறகு, சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது, '' என லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா- சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவிவந்தது. தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வந்த நிலையில், சுமூக முடிவு ஏற்பட்டு வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து லோக்சபாவில் ஜெய்சங்கர் அளித்த விளக்கம்: சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது.
தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக, நமது உறவில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எல்லைப் பிரச்னைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இரு தரப்பும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது.
எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்ட காலத்தில், கடினமான சூழ்நிலையிலும், கோவிட் சவாலுக்கு மத்தியிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.