UPDATED : மார் 09, 2026 12:56 PM
ADDED : மார் 08, 2026 10:46 PM

ஆமதாபாத்: 'டி-20' உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது. நேற்று (மார்ச் 8) நடந்த பைனலில் நியூசிலாந்தை 96 ரன் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.

அபிஷேக் அதிரடி
இந்திய அணிக்கு சாம்சன், அபிஷேக் சர்மா 'சரவெடி' துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 43 பந்தில் 98 ரன் சேர்த்தனர். மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து, ரன் கணக்கை சாம்சன் துவக்கினார். இதற்கு பின் ஒரே ரன் மழை தான். ஜேக்கப் டபி ஓவரில் அபிஷேக் 2 பவுண்டரி, சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். பெர்குசன் ஓவரில் அபிஷேக் (4,6), சாம்சன் (6,4) விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன. டபி வீசிய அடுத்த ஓவரில் அடித்து நொறுக்கிய 'பஞ்சாப் சிங்கம்' அபிஷேக் (4,6,4,4), 18 பந்தில் அரைசதம் எட்டினார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா 92/0 ரன் குவித்தது. ரச்சின் ரவிந்திரா 'சுழலில்' அபிஷேக் (52, 6x4, 3x6) சிக்கினார். 7.2 ஓவரில் இந்தியா 100/1 ரன்னை எட்டியது. 'சேட்டன்' சாம்சன், 33 பந்தில் தொடர்ந்து 3வது அரைசதம் எட்டினார்.
ஒரே ஓவரில் 3 விக்.,
பெர்குசன் ஓவரில் (12வது) சாம்சன் (6,6,4), இஷான் கிஷான் (6) வெளுத்து வாங்க, 24 ரன் கிடைத்தன. தொடர்ந்து ரச்சின் ஓவரில் (14) சாம்சன் 'ஹாட்ரிக்' சிக்சர் அடிக்க, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இஷான், 23 பந்தில் அரைசதம் எட்டினார். இந்த சமயத்தில் 16வது ஓவரை வீசிய நீஷம் 'ஷாக்' கொடுத்தார். முதல் பந்தில் சாம்சன் (89, 5x4, 8x6) அவுட்டானார். 5வது பந்தில் இஷான் (54, 4x4, 4x6) பெவிலியன் திரும்பினார். 6வது பந்தை கேப்டன் சூர்யகுமார் (0) துாக்கி அடிக்க, எல்லையில் ரச்சின் கலக்கலாக பிடித்தார். இந்த ஓவரில் 3 விக்கெட் சரிந்தன. 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்தியா 16 ஓவரில் 204/4 என்ற நிலையை எட்டியது. ஹர்திக் பாண்ட்யா, 18 ரன் எடுத்தார். நீஷம் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே (4,6,6,4,4) 24 ரன் விளாசி, கச்சிதமாக 'பினிஷிங்' செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. துபே (26), திலக் வர்மா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
அக்சர் அபாரம்
கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட் நல்ல துவக்கம் தந்தார். இவரது விளாசல் கைகொடுக்க, ஹர்திக் பாண்ட்யா ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டன. அக்சர் படேல் 'சுழலில்' ஆபத்தான ஆலன் (9) அவுட்டானார். பும்ராவின் முதல் பந்திலேயே ரச்சின் ரவிந்திரா (1) நடையை கட்டினார். இதற்கு பின் விக்கெட்டுகள விரைவாக சரிந்தன. அக்சர் பந்தில் கிளன் பிலிப்ஸ் (5) போல்டானார். சாப்மென் (3) நிலைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி வலையில் செய்பர்ட் (52) வீழ்ந்தார். அக்சர் படேல் பந்தில் டேரில் மிட்சல் (17) அவுட்டாக, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது.
நழுவிய 'ஹாட்ரிக்'
பும்ரா 'வேகத்தில்' நீஷம் (8), மாட் ஹென்றி (0) வரிசையாக அவுட்டாகினர். அடுத்து வந்த பெர்குசன் ஒரு ரன் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. பும்ரா பந்தில் கேப்டன் சான்ட்னர் (43) நடையை கட்டினார். நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'நடப்பு சாம்பியனாக' களமிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை கைப்பற்றி அசத்தியது. இந்தியா சார்பில் பும்ரா 4, அக்சர் படேல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
சேட்டா...
பவுலிங்கில் அசத்திய பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருதும், சூப்பர் 8, செமி பைனல் மற்றும் பைனலில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி, இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.


