போலந்து உடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு
போலந்து உடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு
ADDED : அக் 22, 2026 09:23 PM

புதுடில்லி: ஐரோப்பிய நாடான போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.,21) இந்தியா வந்தார். பிரதமர் மோடியை இன்று (அக்.,22) சந்தித்து பேசினார். இந்தியா – போலந்து இடையிலான உறவை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த சந்திப்பு பின் பிரதமர் மோடி கூறியதாவது:
உக்ரைன் மற்றும் ஈரானில் அமைதியை ஏற்படுத்தும் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்தியாவும் போலந்தும் ராணுவம், விண்வெளி, அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த துறைகளில் இணைந்து தொழில்நுட்பத்தை உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் போலந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், பொறியியல் பொருட்களை போலந்துக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரயில்வே, போக்குவரத்து, நவீன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் போலந்தின் முதலீடுகளையும் ஈர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
