துறவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை : வங்கதேசத்திடம் இந்தியா எதிர்பார்ப்பு
துறவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை : வங்கதேசத்திடம் இந்தியா எதிர்பார்ப்பு
ADDED : ஜன 03, 2025 10:24 PM

புதுடில்லி: '' வங்கதேசத்தில் ஹிந்துத் துறவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு நேர்மையான விசாரணை கிடைப்பதை அந்நாடு உறுதி செய்ய வேண்டும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரம்மச்சாரியை கடந்த ஆண்டு நவ.,25 ல் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்த விவகாரத்தில் கைதானவர்களுக்கு நேர்மையான விசாரணை கிடைப்பதை வங்கதேசத்தின் நடவடிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக அந்நாட்டிடம் இருந்து இந்திய அரசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வந்தது. இதற்கு மேல் சொல்வதற்கு தற்போது ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

