கடற்படைக்காக 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்; இன்று ஒப்பந்தம் கையெழுத்து
கடற்படைக்காக 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்; இன்று ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஏப் 28, 2025 11:23 AM

புதுடில்லி: ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், இந்தியா- பிரான்ஸ் இடையே இன்று (ஏப்ரல் 28) கையெழுத்தாகிறது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வந்தது.
பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்தது.
இது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
என்ன வித்தியாசம்?
* விமானப் படைக்கு வாங்கப்பட்ட ரபேல் போர் விமானத்துக்கும், தற்போது கடற்படைக்காக வாங்கும் ரபேல் விமானத்துக்கும் தொழில்நுட்ப ரீதியில் பல வித்தியாசங்கள் உள்ளன.
* விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து செல்லும் வகையில் ரபேல் கடற்படை போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
* தரையிறங்கும்போது அழுத்தங்களை தாங்கும் வகையில், வலுவூட்டப்பட்ட ஏர் ப்ரேம் மற்றும் அண்டர்கேரேஜ் உள்ளன.
* 'ஜம்ப் ஸ்ட்ரட்' தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான தரையிறங்கும் கியர்கள், மடிப்பு இறக்கைகள் இடம்பெற்றுள்ளன.
* ரபேல் விமானப்படை விமானத்தைவிட கடற்படை விமானத்தின் எடை, 500 கிலோ அதிகம். இதன் எடை, 10,600 கிலோ.
* இந்த விமானத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போன்ற ஆயுதங்களை எடுத்துச்செல்ல முடியும். மேலும், கடல்சார் இலக்கு உட்பட கடற்படை போருக்கு ஏற்றபடி ரேடார், மின்னணு அமைப்புகளை கொண்டுள்ளது.