UPDATED : மே 07, 2025 02:25 PM
ADDED : மே 07, 2025 10:31 AM

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. பதுங்கி இருந்த 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தரப்பில் எந்தவொரு தாக்குதல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இரு நாடுகள் இடையே வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. மேலும் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இருநாடுகள் இடையே போர் மூளும் சூழல் எழுந்தது. இதனையடுத்து இந்திய படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நாடு முழுவதும் போர் ஒத்திகை நடந்தது.
இந்நிலையில் (ஏப்7) நள்ளிரவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லையில் இருந்தபடியே வான்வழியாக விமான படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதனை இந்திய ராணுவத்தினர் எக்ஸ்வலை தளத்தில் இலக்கை நோக்கி வெற்றி அடைந்துள்ளோம் என பதிவிட்டுள்ளனர். இந்த அதிரடி அட்டாக்கிற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி, பஹ்வல்பூர், முசாபர்பாத், பர்னாலா கோட்லி, முரித்கே, பகவல்பூர், சக் அம்ரு , பிம்பர், குல்பூர், சியால்கோட், என மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களும் அழிக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவு முதல் நடந்த தாக்குதலை பிரதமர் மோடி கண்காணித்தார். இந்த தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை பிரதமர் மோடி அங்கீகரித்தார். இந்த அதிரடி தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் காங்கிரஸ் எம்பி., ராகுல், காங்., தலைவர் கார்கே மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டி உள்ளனர்.
அமித்ஷா தனது பதிவில்: இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் மோடி அரசு உறுதியாக பதில் அளிக்கும் என கூறியுள்ளார்.
ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், ''நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டுள்ளார்.
காங்., தலைவர் மல்லிகார்ஜூன்கார்கே தனது பதவில்: இந்திய படைகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வீரர்களின் மன உறுதியையும் தைரியத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்.