தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாகிஸ்தானுக்கு இந்தியா செய்த மனிதாபிமான உதவி
தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாகிஸ்தானுக்கு இந்தியா செய்த மனிதாபிமான உதவி
ADDED : ஆக 25, 2025 10:28 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள நிலையில், மனிதாபமான முறையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால், பாகிஸ்தானுடன் இருந்த தொடர்பை மத்திய அரசு முற்றிலுமாக நிறுத்தியது. பாகிஸ்தான் பலமுறை கெஞ்சியும், அதட்டியும் பார்த்தது. ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவே இல்லை.
இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் முக்கிய நதியான தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வெள்ள அபாயம் தொடர்பான எச்சரிக்கையை இந்தியா மனிதாபிமான முறையில் பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது. வழக்கமாக, சிந்து நதி நீர் ஆணையரின் மூலம் இதுபோன்ற எச்சரிக்கைகளை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் விஜய் ஜெகதீஷ் குமார், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம், இந்த வெள்ள அபாயம் குறித்த தகவல் பகிரப்பட்டது. அதனடிப்படையில், பாகிஸ்தான் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.