துல்லிய தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா! ஹிட் லிஸ்ட் 'ரெடி'; தொடை நடுங்கும் பாக்.,
துல்லிய தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா! ஹிட் லிஸ்ட் 'ரெடி'; தொடை நடுங்கும் பாக்.,
UPDATED : மே 02, 2025 07:54 AM
ADDED : மே 02, 2025 06:41 AM

''விரைவில் போர் வரலாம்; 24 மணி நேரத்தில் வந்துவிடும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,'' என பாகிஸ்தான், ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப் அறண்டு போய் கதறுகிறார்.
ஆனால், இந்தியா போர் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. படிப்படியாக ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரின் விளைவுகள் பெரிதாக இருந்தாலும், தவிர்க்க முடியாத விஷயமாக மாறியுள்ளது.
''எந்த பயங்கரவாதியையும் விட்டு வைக்க மாட்டோம். 26 அப்பாவி மக்களை கொன்ற அனைத்து பயங்கரவாதிகளையும், அதற்கு காரணமானவர்களையும் தீர்த்துக்கட்டுவோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.
ரகசிய தாக்குதல்
இந்தியாவின் போர் நடவடிக்கைகளை பொறுத்தவரை பல கட்டங்கள் உள்ளன. முதலில் ரகசிய தாக்குதல். அதாவது குறிப்பிட்ட வடிவமைப்பில் நடக்கும் இந்த தாக்குதல் முன்னதாக அறிவிக்கப்படுவதில்லை. இவை பெரும்பாலும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கப்படுகின்றன.
இந்த தாக்குதல் பெரும்பாலும், முன்னர் தாக்கப்பட்ட ஒரு ராணுவ பிரிவு அல்லது பயங்கரவாத பிரிவின் மீது, பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. அந்த தாக்குதல் எதிரி நாட்டுக்கு, ஒரு செய்தியை அனுப்பும் விதத்தில் இருக்கும்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
கடந்த காலங்களில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாடு கோடு முழுவதும், குறிப்பிட்ட இலக்குகளுக்கு எதிராக, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தியது. 2016ம் ஆண்டு, காஷ்மீர் மாநிலம் உரியில், 17 ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவத்தின் சிறப்பு படைகள், உண்மையான கட்டுப்பாடு எல்லைக்கோட்டை கடந்து நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
வான்வழி தாக்குதல்
கடந்த 2019 பிப்ரவரியில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு தற்கொலை படை நடத்திய தாக்குதலில், 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்- -இ-- முஹமது பொறுப்பேற்றது. அப்போது இந்திய விமானப்படை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பயங்கரவாதிகளின் மறைவிடங்களைத் தாக்கி, பயங்கரவாதிகளை அழித்து ஒழித்தது.
அமெரிக்க ராணுவம் எதிரிகளை அழிப்பதில் கையாளும் நவீன முறை குறித்தும் இந்தியா ஆராய்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், பயங்கரவாதிகளின் பதுங்கும் இடங்களை கண்டறிந்து குறி வைத்து, அழிக்கும் நடைமுறையை அமெரிக்கா பின்பற்றுகிறது. இஸ்ரேல் ராணுவமும் கடந்த காலங்களில் ஈரான் தலைவர்கள் சிலரை இவ்வாறு தாக்குதல் நடத்தி அழித்தது.
துல்லிய தாக்குதல்
இந்தியா குறிவைத்து அழிக்கும் என்ற அச்சத்தில், 'லஷ்கர்-இ-தொய்பா' மற்றும் 'ஜமாத்-உத்-தாவா' பயங்கரவாத அமைப்புகளின் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு, பாக்., ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு, சிறப்பு பாதுகாப்பு அளித்துள்ளது. அமெரிக்க ராணுவம் ஒசாமா பின் லேடனை கொன்றது போல், ஹபீஸ் சயீது மீது இந்திய ராணுவம் ரகசியமாக துல்லியல் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
லாகூரில் முகல்லா ஜாகுர் பகுதியில் உள்ள அவரது வசிப்பிடத்தில் பாக்., முன்னாள் ராணுவத்தினரை கொண்ட, ஸ்பெஷல் சர்வீசஸ் குரூப் (எஸ்.எஸ்.ஜி.,) என்ற படையினர், பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
பயங்கரவாத வழக்குகளில், 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதை, 'பெயரளவில்' காவலில் வைத்துள்ளதாக, நாடகமாடும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், அவரது வீட்டையே கிளை சிறை போல் மாற்றியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவரது வசிப்பிடம் உள்ளதால், பொதுமக்களை கேடயமாக, பாக்., ராணுவம் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
![]() |
![]() |
-நமது நிருபர்-