உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ADDED : நவ 28, 2025 08:58 PM

புதுடில்லி: இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இன்று வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை எடுத்துரைக்கிறது. 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% என்ற வளர்ச்சி விகிதத்துடன், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாகும்.
நடப்பு நிதியாண்டில், முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதமாக உள்ளது. முதலீடு மற்றும் உற்பத்தித்திறனை வலுப்படுத்தியது மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்கிய பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான தேஜ அரசு இந்த வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

