ADDED : அக் 30, 2025 12:05 AM

புதுடில்லி: மின் பரிமாற்றம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா - நேபாளம் இடையே ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
நம் அண்டை நாடான நேபாளத்தின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் குல்மான் கிசிங் அரசு முறை பயணமாக புதுடில்லி வந்துள்ளார்.
அவருடன் மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் சந்தித்து நேற்று பேச்சு நடத்தினார். பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக, மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா - நேபாளம் இடையே மின் பரிமாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக, நீண்ட காலமாக பேச்சு நடந்து வந்தது. அதை செயல்படுத்தும் வகையில், உயர் திறன் கொண்ட மின் பரிமாற்ற வழித்தடங்களை இரு நாடுகளுக்கு இடையே உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, இந்தியாவில் உள்ள ஒரு மத்திய அரசு நிறுவனமும், நேபாளத்தில் உள்ள நிறுவனமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும். இந்த ஒப்பந்தம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, 'பவர்க்ரிட்' மற்றும் நேபாள மின்சார ஆணையம் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீஹாரின் நியு புர்னியா - நேபாளத்தின் இனருவா மற்றும் உத்தர பிரதேசத்தின் பரேலி - நேபாளத்தின் தோதோதாரா இடையில், இந்த மின் பரிமாற்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்டங்கள் நிறைவடைந்தவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வர்த்தகம் கணிசமான அளவில் மேம்படும். எரிசக்தி துறையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

