தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவக்க இந்தியா - நியூசிலாந்து இடையே உடன்பாடு
தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவக்க இந்தியா - நியூசிலாந்து இடையே உடன்பாடு
ADDED : மார் 18, 2025 04:24 AM

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் இடையேயான சந்திப்பில், ராணுவ துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இருதரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவங்குவதற்கு உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் நாடான நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான், ஐந்து நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் வந்தார். டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அவருடன் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழில் துறையினர் வந்துள்ளனர். டில்லியில் நேற்று, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி - கிறிஸ்டோபர் லக்சான் சந்தித்தனர். இரு தரப்பு உறவுகள் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
நியூசிலாந்தில், இந்தியாவுக்கு எதிரான சில அமைப்புகளின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கிறிஸ்டோபர் லக்சானிடம் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தோ - பசிபிக் பிராந்தியம், சுதந்திரமான, பாதுகாப்பான, அனைவருக்குமானதாக இருப்பதை உறுதிசெய்ய இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சியையே விரும்புகிறோம், எல்லையை விரிவுபடுத்துவதில் அல்ல என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சமமான வாய்ப்புகளுடன், பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய, விரிவான தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுகளை துவக்க இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.