போர் நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் அறிவிப்பு: மே 12ல் ராணுவ அதிகாரிகள் பேச்சு
போர் நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் அறிவிப்பு: மே 12ல் ராணுவ அதிகாரிகள் பேச்சு
UPDATED : மே 10, 2025 10:20 PM
ADDED : மே 09, 2025 11:36 PM

புதுடில்லி : இன்று 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டு உள்ளன. வரும் 12ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டிரம்ப் அறிவித்து இருந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின. இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது; இதில், 16 பேர் உயிரிழந்தனர்.
குண்டு மழை
இதற்கு மறுநாள் காலையே பதிலடி தரப்பட்டது. லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் புகுந்த நம் ட்ரோன்கள் குண்டு மழை பொழிந்ததில், பாக்., ராணுவம் நிலைகுலைந்தது.
சில மணி நேரம் அமைதிகாத்த நிலையில், 8ம் தேதி இரவில் பாக்., மீண்டும் தாக்குதலை தொடர்ந்தது. இந்த முறை, ஜம்மு- - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் செலுத்தியது. இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு, எதிரி ட்ரோன்களை நடுவானில் மறித்து அழித்தது.
நேற்றும் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு -- காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. அவை அனைத்தையும் நடுவானில் மறித்து நம் ராணுவம் சுக்குநுாறாக்கியது.
இன்று, பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அந்நாட்டின் முக்கியமான 3 விமானபடை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் அளித்து அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை பாகிஸ்தான் துணை பிரதமர் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள்.என்றார். இதன் மூலம் போர் நிறுத்தம் அமலாகி உள்ளது.