விமானம், கடற்படையில் இணைந்து செயல்பட இந்தியா - பிலிப்பைன்ஸ் முடிவு
விமானம், கடற்படையில் இணைந்து செயல்பட இந்தியா - பிலிப்பைன்ஸ் முடிவு
ADDED : ஆக 06, 2025 07:55 AM
புதுடில்லி : டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அரசுமுறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ், தலைநகர் டில்லியில் நேற்று, ஜனாதி பதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதன்பின், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
இதன்பின், பிரதமர் மோடி - பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் முன்னிலையில், உத்திசார் கூட்டாண்மை அறிவிப்பு மற்றும் செயல்படுத்தல்; இரு நாடுகளின் விமானப்படை, கடற்படைகளுக்கு இடையே பேச்சு நடத்துதல்; கலாசார பரிமாற்ற திட்டம், கிரிமினல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம் உட்பட ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, இந்தியா -- பிலிப்பைன்ஸ் இடையே துாதரக உறவு ஏற்பட்டதன் 75ம் ஆண்டை நினைவுகூரும் வகையில், சிறப்பு தபால் தலையையும் இருவரும் வெளியிட்டனர். இதையடுத்து, அவர்கள் கூட்டாக செய்தியாளர் களைச் சந்தித்தனர்.
பிரதமர் மோடி கூறுகையில், “விருப்பத்தின்படி, இந்தியா - பிலிப்பைன்ஸ் நண்பர்கள். ஆனால், விதிப்படி கூட்டாளிகள். இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் வரை, இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. இந்த நட்பு கடந்த கால உறவு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான வாக்குறுதி.
“இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு சார்ந்த ஒழுங்குமுறை அமலில் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
''சர்வதேச சட்டங்களின்படி கடல்வழி சுதந்திர வர்த்தகத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு இயற்கையானது; அவசியமானது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்ததற்கு பிலிப்பைன்ஸ் அரசுக்கு நன்றி,” என்றார்.