வங்கதேசம்-பாகிஸ்தான் செயல்பாடுகளை கவனிக்கிறோம்: இந்தியா எச்சரிக்கை
வங்கதேசம்-பாகிஸ்தான் செயல்பாடுகளை கவனிக்கிறோம்: இந்தியா எச்சரிக்கை
ADDED : ஜன 25, 2025 01:18 PM

புதுடில்லி: வங்கதேசத்துக்கு ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பியதை அடுத்து, நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.பாகிஸ்தானுடன் வங்கதேசத்தின் நெருக்கமான உறவுகள் இந்தியாவை கவலையடையச் செய்கின்றன.
வங்கதேசத்துக்கு ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பியதை அடுத்து, நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: நாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும், தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.
பிராந்திய வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் வங்கதேச மக்கள் செழிக்க எங்கள் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
எல்லையில் இந்தியாவின் எல்லை வேலி அமைப்பதற்கு வங்கதேசம் ஆட்சேபனை தெரிவித்தது குறித்து, கேட்கப்பட்ட கேள்விக்கு, ' மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. வங்கதேசத்துடன் இந்தியா செய்துள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே, எல்லையில் வேலி அமைக்கப்படுகிறது, என ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்தார்.