மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள்; அனுப்பியது இந்தியா
மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள்; அனுப்பியது இந்தியா
ADDED : ஏப் 05, 2025 10:33 PM

புதுடில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருட்களை இந்தியா இன்று அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் இறுதியில் மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 3200ஐ தாண்டியுள்ளது.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள மியான்மருக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. ஏற்கனவே, அந்த நாட்டிற்கு நம் நாடும் ' ஆப்பரேஷன் பிரம்மா' என்ற பெயரில் உதவியை துவக்கி உள்ளது. தற்காலிக கூடார துணிகள்,படுக்கை விரிப்புகள், போர்வைகள், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள், சோலார் விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஜெனரேட்டர் செட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவை 'சி130 ஜெ' விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., காரியல் கப்பல், திலவா துறைமுகத்திற்கு சென்றடைந்தது. பின்னர், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

