நவீன தொழில்நுட்பத்துக்கு இந்தியா தயாராக வேண்டும்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
நவீன தொழில்நுட்பத்துக்கு இந்தியா தயாராக வேண்டும்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ADDED : நவ 29, 2026 11:00 AM

மஹாராஷ்டிராவின் புனேவில் தேசிய பாதுகாப்பு அகாதமியின் 151வது பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அவர் பேசியதாவது: முதலில், உங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நாள் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். இன்றிலிருந்து நீங்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள்.
இந்திய ஆயுதப்படைகளில் சேர நீங்கள் மேற்கொண்ட கடுமையான பயிற்சி, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடே இந்த நாள். இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட தேசம் என்று நாம் பெருமையுடன் கூறுகிறோம். நமது மக்கள் தொகை போக்குகள் படிப்படியாக மாறி வருகின்றன என்பதையும், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில், இந்தியாவின் இளைய தலைமுறை மக்கள் தொகை குறைய துவங்கும். இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். மனித ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தொழில்நுட்பம் மற்றும் இயந்திர ஆற்றல் சார்ந்த திறன்களை வலுப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு இந்தியா தயாராக வேண்டும். இந்தியாவை உலக அரங்கில் முன்னணியில் கொண்டு செல்ல, அறிவுத்திறன் மற்றும் மனித ஆற்றல் ஆகிய இரண்டையும் சரியான விகிதத்தில் ஒருங்கிணைக்கும் பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது.
உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகள், மாறி வரும் இந்தச் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டுள்ளன. மனித உழைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு, இயந்திர ஆற்றலையும் தொழில்நுட்பத்தையும் தங்கள் பலமாக மாற்றிக்கொண்டுள்ளன. நாமும் இப்போதிருந்தே அதே திசையில் தயாராகத் துவங்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
