கட்டாக்கில் ரோகித் ராஜ்ஜியம்; தொடரை வென்றது இந்தியா
கட்டாக்கில் ரோகித் ராஜ்ஜியம்; தொடரை வென்றது இந்தியா
ADDED : பிப் 09, 2025 09:53 PM

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (பிப்.,9) நடைபெற்றது. கடந்த போட்டியில் விளையாடாத கோலி, இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல, அணியில் இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி முதல்முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார்.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ரூட் 69 ரன்களும், டக்கெட் 65 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 305 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித்தும், துணை கேப்டன் கில்லும் அதிரடியாக ஆடினர். 16.4 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்திருந்த போது, கில் 60 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, வந்த கோலி 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடினர். 76 பந்துகளை சந்தித்த ரோகித், சிக்சர் அடித்து சதத்தை பதிவு செய்தார். பார்ம் அவுட்டில் தவித்து வந்த அவர் 119 ரன்னில் அவுட்டானார். இந்த சதத்தின் மூலம் அவர் பார்முக்கு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் (44 ரன்கள்), அக்ஷர் படேல் (41 ரன்கள் நாட்அவுட்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பிப்.,12ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.