ADDED : ஜூன் 12, 2025 12:37 AM

புதுடில்லி:''திறன் இடைவெளிகளை குறைத்து, ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக மாற இந்தியா இலக்கு வைத்துள்ளது,'' என, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, நாட்டின் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, ராணுவத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி வருகிறது.
இதன் வாயிலாக, ராணுவத்துக்கு தேவையான உபகரணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை ராணுவம் கொள்முதல் செய்து வருகிறது.
கொள்முதல்
'சுயசார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு செயல்படுவதால், உள்நாட்டு உற்பத்திக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, ராணுவ தளவாடப் பொருட்களில், நம் ராணுவம் வெளிநாடுகளையே சார்ந்திருந்தது. ஆனால் தற்போது, இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது.
நம் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நம் ராணுவத்தினரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் நேற்று கூறுகையில், ''திறன் இடைவெளிகளை குறைத்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் தயாரிப்பில், வல்லரசாக மாற இந்தியா இலக்கு வைத்துள்ளது. கொள்முதல் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் காரணமாக, இறக்குமதியை சார்ந்திருந்த காலம் தற்போது மாறி விட்டது.
''நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு உள்ளது,'' என்றார்.
உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதன் வாயிலாக, சமீபத்திய ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 65 சதவீதத்தில் இருந்து, 19 ஆக குறைந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் வாயிலாக, 'ட்ரோன்' தயாரிப்பில் வல்லரசு அந்தஸ்தை அடைய, நம் நாடு இலக்கு வைத்துள்ளது.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தங்களில், 81 சதவீதம் உள்நாட்டு சப்ளையர்களுக்கு கிடைத்தது.
இந்த புள்ளி விபரங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளில் தன்னிறைவு பெறுவதற்கான நம் நாட்டின் லட்சியத்தை பிரதிபலிக்கின்றன.
பங்களிப்பு
அரசு - தனியார் துறை ஒத்துழைப்பு வாயிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா இலக்கு வைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தற்போது ராணுவ உற்பத்தியில், 20 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.
'ட்ரோன்' வல்லரசாக மாறுவதற்கான லட்சியத்தை தக்கவைக்க, கொள்கை, உள்நாட்டு திறன் மேம்பாட்டை இந்தியா தொடர வேண்டும். கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் தொடர்ந்து உருவாகி வருவதால், ட்ரோன் தொழில்நுட்பத்தில் தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய போட்டி சக்தியாக, இந்தியா நிலைநிறுத்திக் கொள்கிறது.

